Archives: மே 2024

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார். 

 

தி இண்டியாமேன்

1950 மற்றும் 60 களில், சர்வதேச பேருந்து பாதை, 'தி ஹிப்பி டிரெயில்' ஐரோப்பாவை ஆசியாவின் முக்கிய தளங்களுடன் இணைத்தது. "பேடி" என்ற புனைபெயர் கொண்ட ஓய்வு பெற்ற ஆங்கிலேய ராணுவ வீரர் ஒருவர், இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவதன் மூலம் அடிக்கடி இந்தியாவிற்கு வரும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிவு செய்தார். ‘தி இண்டியாமேன்’ என்று அழைக்கப்படும் பேருந்து லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் சென்றது. பயணத்தின் தொடக்கத்தில், பயணிகள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறினர், ஆனால் 60 நாட்களின் முடிவில் அவர்கள் இறுகிய கழுத்துப்பட்டை மற்றும் மூட்டுவலியுடன் இறங்கினர். முற்றிலும் சோர்ந்துபோனதால், அடுத்த பேருந்தில் வீடு திரும்புவதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர்.

எலியா ஒரு உற்சாகமான தீர்க்கதரிசி. அவரது தீர்க்கதரிசன பயணத்தின் தொடக்கத்தில், அவர் மிகவும் உத்வேகத்துடன் இருந்தார். அவர் எந்த நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் மேலும் தீய ராஜாவான ஆகாப் மற்றும் அவனது ராணி யேசபேலை எதிர்க்கத் தயங்கவில்லை. இருப்பினும், சில காலம் கழித்து, எலியாவால் முன்செல்ல முடியவில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல யேசபேல் தனது தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காக அவரது உயிரைப் பறிக்க வந்தாள் (வ.2). உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்த அவர், "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தார் (வ.4). அவர் ஒரு மரத்தடியில் களைப்புடனும் சோர்வுடனும் தூங்கியபோது, அவரை ஊக்கப்படுத்தவும் உணவளிக்கவும் தேவன் ஒரு தூதனை அனுப்பினார் (வ.5-7). மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட்ட எலியா பல நாட்கள் ஓரேபுக்கு நடந்தார் (வ.8). எலியாவும், ‘தி இண்டியாமேன்’ பயணிகளும் அடைந்த சோர்வு உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏமாற்றம், தோல்வி, இழப்பு மற்றும் துக்கம் என்ற திருப்பங்கள் மூலம், நாம் இளைப்படைந்து, சோர்வடைகிறோம். ஆனால் விரக்தியின் ஆழ்ந்த தருணங்களில், நாம் தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார், அவருடைய உதவி வெகு தொலைவில் இல்லை.